Wednesday, October 12, 2016

இலங்கையில் விஷேட கல்வியும் அதன் வளர்ச்சியும். 


இலங்கையில் விசேட கல்வி வளர்ச்சி படிமுறைகள் அண்மைக்காலங்களில் இருந்தே முக்கியத்துவம் கொண்டதாக பார்க்கப்படுகின்றது. விசேட கல்வியானது உடல் ஊன முற்றவர்களின் கல்வி மற்றும் அதனோடு தொடர்பான மேம்பாடு என்பன தொடர்பான சிந்தனையை அடியொற்றியே தோற்றம் பெற்றிருப்பதைக் காணமுடிகின்றது.மனிதர்கள் பல்வேறு விதங்களில் ஊனமுறுதல் என்பது ஆரம்ப காலம் முதல் இன்று வரை தவிர்க்க முடியாத ஒன்றாகவே உள்ளது. 
ஆரம்ப காலத்தில் இவர்கள் பயனற்றவர்களாகவும் சமூகத்தின் சுமைகளாகவும் எப்போதும் மற்றவர்களின் தயவில் வாழவேண்டிய பரிதாபத்துக்குரியவர்களாகவும் நோக்கப்பட்டனர்.

ஆரம்ப காலத்தில் இவர்களது கல்வி தொடர்பாகவோ வாழ்க்கை தொடர்பாகவோ எதுவும் சிந்திக்கப்படவில்லை. மனித நாகரிகத்தின் விளைவால் அனைவரையும் ஒன்றுதிரட்டி அடிப்படை விடயங்களைக் கற்பிக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. இதன் போது கிடைத்த வெற்றிகளின் விளைவாகவே விசேட கல்விச் சிந்தனைப் போக்கு தோற்றம் பெறலாயிற்று.

நமது நாட்டைப் பொறுத்தவரையில் உடல் ஊனமுற்றவர்களின் கல்வி தொடர்பான சிந்தனை ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்திலேயே தோற்றம் பெற்றிருப்பதனைக் காணக்கூடியதாக உள்ளது. செல்வி மேரிசாம்பன் என்பவரே இச் சிந்தனைக்கு செயல் வடிவம் கொடுத்த பெருமைக்குரிய பெண்மணியாவார்.
இலங்கையில் விசேட கல்வியானது ஒரு தேசியக் கடமையாக ஆரம்பிக்கப்பட்டு தற்போது ஒரு நூற்றாண்டு நிறைவுபெற்றுள்ளது. இலங்கையில் மக்கள் தொகையில் நூற்றுக்குப் பத்துப் பேர் விசேட தேவையுடைய பிள்ளைகளாக அடையாளங் காணப்பட்டுள்ளனர். அவர்கள் மீது சமூகம் நல்ல அக்கறைகாட்ட வேண்டியது தேசிய தேவைப்பாடாகும். கல்வியமைச்சில் நிறுவப்பட்டுள்ள விசேட கல்வியலகின் கீழ், இந்த விசேட கல்வி தேவைப்படும் பிள்ளைகளின் தற்போதைய எண்ணிக்கை 52000 ஆகும்.

விசேட கல்வி அலகின் எண்ணிக்கை 511 ஆகும். ஆசிரியர்களில் 1200 பேர் இந்த மாணவர்கள் கல்வி பெறுவதற்கு தற்போது பங்களிப்புச் செலுத்துகின்றனர். இவ் விசேட கல்வித் துறையானது இலங்கையில் பல காலகட்டங்களில் பல்வேறு விதமாக வளர்ச்சியடைந்துள்ளது. அவ்வாறான வளர்ச்சிப் படிமுறைகளை பின்வருமாறு நோக்கலாம்.

1912 விழிப்புலனற்றவர்களுக்கும் செவிப்புலனற்றவர்களுக்குமான முதலாவது விடுதிப் பாடசாலை இரத்மலானையில் ஆரம்பிக்கப்பட்டது.

1941 விசேட பாடசாலைகளில் கல்வி கற்கும் ஆசிரியர்களின் சம்பளத்தில் 75 சதவீதத்தை அரசு பொறுப்பேற்றுக் கொண்டது. இதன் மூலம் அரசு இத் துறை தொடர்பான தனது பங்களிப்பினை ஓரளவுக்கேனும் நிறைவேற்ற முன் வந்தமை இத்துறை வளர்ச்சிப் போக்கில் குறிப்பிடத்தக்கதான அம்சமாகும்.

1943 கன்னங்கரா அறிக்கை வெளியிடப்பட்டது. அவ்வறிக்கையில் பார்வையற்றவர்கள் கற்பதற்கு பிறேயில் முறையை பயன்படுத்த வேண்டுமெனவும் செவிப்புலனற்றோர் கற்பதற்கு உதட்டு வாசிப்பு முறையை பயன்படுத்த வேண்டுமெனவும் குறிப்பிடப்பட்டிருந்தது.

1956 தமிழ் பிரதேசங்களைப் பொறுத்தமட்டில் கைதடி கிராமத்தில் செவிப்புலன், விழிப்புலனற்றோருக்கான நவீல்ட் பாடசாலை ஆரம்பிக்கப்பட்டது.

1961 ஜெயசூரிய அறிக்கை வெளிவந்தது. இவ்வறிக்கையில் சாதாரணமான கேட்டல் திறனற்றவர்களுக்கு கேள் கருவிகள் வழங்கப்பட வேண்டும். தீவிரமான குறைபாடுடைய பிள்ளைகள் ஒரு பாடசாலையிலும் மிதமான குறைபாடுடைய பிள்ளைகள் வேறொரு பாடசாலையிலும் கல்வி கற்கலாம். பிரதேசத்திலுள்ள குறைபாடுடைய பிள்ளைகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப தனித்தனியான பாடசாலைகள் அமைக்கப்பட வேண்டுமெனவும் குறிப்பிடப்பட்டிருந்தது.

1962 ஜீன் கென்மோர் அறிக்கையில் விழிப்புலனற்ற பிள்ளைகளை சாதாரண பாடசாலைகளில் இணைத்துக் கற்கலாம். அப்பாடசாலைகளில் இடம்பெறும் வேலைத்திட்டங்களில் அவர்களையும் ஒன்றிணைத்து அவர்களுக்கு உதவ வேண்டும். இப்பாடசாலைகளில் கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு விசேட பயிற்சிகள் வழங்குதல் வேண்டும் என்பன போன்ற பல்வேறு விடயங்கள் குறிப்பிடப்பட்டிருந்தன.

1967 இலங்கையில் அமைக்கப்பட்ட வித்யோ தய பல்கலைக்கழகத்தில் விசேட கல்வி தொடர்பான பட்டப்பின் படிப்பு பாடநெறி ஆரம்பிக்கப்பட்டது.

1968 விழிப்புலனற்ற 17 மாணவர்கள் சாதாரண பாடசாலைகளில் கல்வி பயிலும் விசேட வேலைத் திட்டமொன்று ஆரம்பிக்கப்பட்டது.

1969 அமைச்சரவை அறிக்கையில் குறைபாடுடைய பிள்ளைகள் சாதாரண பாடசாலைகளில் கல்வி பயிலும் திட்டம் ஏற்றுக் கொள்ளப்பட்டது.

1970 மகரகம ஆசிரியர் பயிற்சிக் கலாசாலையில் விழிப்புலனற்ற மாணவர்களின் கல்வி தொடர்பாக ஓராண்டுப் பயிற்சி நெறி ஆசிரியர்களுக்கு அளிக்கப்பட்டது.

1971 விசேட கல்விப் பிரிவு ஆரம்பிக்கப்பட்டது.

1972 ஒன்றிணைந்த கலைத் திட்டம் உருவாக்கப்பட்டது. இதன் மூலம் உடல் ஊனமுற்ற மாணவர்களை சாதாரண பாடசாலைகளில் சாதாரண மாணவர்களோடு இணைத்துக் கல்வி கற்கும் வாய்ப்பு கிட்டியது. விழிப்புலனற்ற மாணவர்களே அத் திட்டத்தின் மூலம் அதிகம் பயனடைந்தனர். இவ்வாண்டிலேயே விழிப்புலனற்ற பிள்ளைகளுக்குக் கற்பிப்பதற்கான ஈராண்டுப் பயிற்சி நெறியும் ஆரம்பிக்கப்பட்டது.

1976 உளக் குறைபாடுடைய பிள்ளைகளுக்கு கற்பிப்பதற்கான பட்டதாரி ஆசிரியர்களுக்கு விசேட டிப்ளோமா கற்கை நெறி கொழும்புப் பல்கலைக்கழகத்தில் ஆரம்பிக்கப்பட்டது.

1979 போகொட பிரேமரட்ண அறிக்கை வெளியிடப்பட்டது. இவ்வறிக்கையில் விசேட கல்வி தொடர்பாகவும் மீத்திறனுடைய மாணவர்களின் கல்வி தொடர்பாகவும் குறிப்பிடப்பட்டிருந்தது.

1981 கல்வி வெள்ளையறிக்கையில் விசேட கல்வி தொடர்பாக பெரிதாக குறிப்பிடப்படாவிடினும் அத் துறை தொடர்பான அதிகாரிகளின் கடமைகள் தொடர்பாக குறிப்பிடப்பட்டிருந்தது.

1985 உளக் குறைபாடுடையோருக்கான பாடநெறி விஸ்தரிக்கப்பட்டது. இப் பிள்ளைகளுக்கு கற்பிப்பதற்கு மகரகம ஆசிரியர் பயிற்சிக் கலாசாலையில் பட்டதாரி ஆசிரியர்களுக்கான விசேட டிப்ளோமா பயிற்சி நெறி ஆரம்பிக்கப்பட்டது. அத்துடன் உளக்குறைபாடுடையோருக்கான பாட நெறி மேலும் விஸ்தரிக்கப்பட்டு மகரகமவில் பிறேயில் அச்சகம் ஆரம்பிக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்க அம்சமாகும்.

1988 தேசியக் கல்வி நிறுவகத்தில் விசேட கல்விக்கென தனியான ஒரு அலகு ஆரம்பிக்கப்பட்டது.

1994 - ஸ்பெயின் நாட்டில் நடந்த விசேட கல்வி தொடர்பான முக்கியமான மகாநாட்டில் இலங்கையும் கலந்து கொண்டது. இதன் பிரகாரம் உட்படுத்தல் கல்வி முறையினை இலங்கையும் ஏற்றுக் கொண்டது.
1997 பொதுக் கல்விச் சீர்திருத்தம் எனும் தலைப்பில் விசேட கல்வி என்பது சிறப்புக் கல்வியென மொழியப்பட்டது. இதே காலப் பகுதியில் காப்பிற்றிக்கம தேசியக் கல்வியியல் கல்லூரியில் 3 ஆண்டுகள் கொண்ட விசேட கற்கை நெறி ஆரம்பிக்கப்பட்டது.
2003 தேசியக் கல்வி நிறுவகத்தில் விசேட கல்வி டிப்ளோமா கற்கை நெறி சிங்கள மொழி மூலம் ஆரம்பிக்கப்பட்டது.

2004 யாழ்ப்பாணம் தேசியக் கல்வியியற் கல்லூரியில் முதல் முதலாக தமிழ் மொழி மூலமான விசேட கற்கை நெறி ஆரம்பிக்கப்பட்டது.

2005 தர்காநகர் தேசியக் கல்வியியற் கல்லூரியில் தமிழ் மொழி மூலமான விசேட கல்வி கற்கை நெறி ஆரம்பிக்கப்பட்டது. இவ்வாறு நமது நாட்டில் விசேட கல்வித் துறையானது பல்வேறு விதமான வளர்ச்சிப் படி நிலைகளைக் கொண்டு வளர்ச்சியடைந்து வருகின்றமையினைக் காணக்கூடியதாக உள்ளது.

Visvalingam Prashanthan B.Ed. (Hons), M.Ed. (Reading)
Student Counselor
ICBT Batticaloa Campus | No 178A, New Kalmunai Road | Batticaloa
General: 0654777888 | Mob: 0777809819 / 0713142200
E-mail: prashan002@gmail.com  | Web: https://teachsrilanka.blogspot.com/




No comments:

Post a Comment